155…

Share

155, மட்டக்குளி- சொய்சாபுர என குறிக்கப்பட்ட பெயர் பலகை தாங்கி வரும் பஸ்,பலரின் விழித்திரைகளில்  நீங்காத.  சிறப்புத்தோற்றம் இந்த பஸ்ஸிற்கு மட்டும், வேறு எந்த பஸ் சேவைக்கும் இல்லாத புகழாரங்கள் இதற்குரியதாக மட்டும்.வளர்ந்து வரும் நாடா இலங்கை?என சந்தேகத்தை எழுப்பும் வகையில் சேவை வழங்கும் பஸ் 155.இப்படியெல்லாம் பில்டப் செய்வேன் என்று மட்டும் எண்ணாதீர்கள் நண்பர்களே!அவ்வாறு நான் கூறினால் சிலபல உள்ளங்கள்(155பிரயாணிகள்)பொங்கி எழக்கூடும்.ஏன் அது பல விபரீத விளைவுகளையும் ஏற்படுத்திவிடலாம்.அத்துடன் இவ்வாறான பொய்கள் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது.எனது இந்த கருத்துக்கு காரணம் என்ன?அப்படி என்னதான் இந்த பஸ் பிரயாணத்திலுள்ள சிக்கல்?என்று உங்கள் மனதில் பல கேள்விகள் இத்தருணத்தில்……..

இத்தகைய 155 பற்றிய கேள்விகளுக்கு என்னால் (என்னால் மட்டுமே) சிறப்பாய் தகுந்த பதில் கூறமுடியும் என மிகுந்த கர்வத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்(கொஞ்சம் ஓவர்தான்)பத்து வருடங்களாக இந்த பஸ்ஸில் பிரயாணித்து தசாப்தம் ஒன்றை ஒரு சிரேஷ்ட பயணி என்ற ரீதியில் பூர்த்தி செய்த பெருமை அடியேனுக்கே உரியது.சமீபத்தில் பல்கலைக்கழக தெரிவுக்கடிதம் வந்ததும் கொழும்பு பல்கலைக்கழகம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியை விட 155 இல் இன்னும் 4 வருடங்கள் பயணிக்க வேண்டும் என்ற வேதனைதான் என்னை அதிகம் தாக்கியது.

155 என்ற பெயரைக் கேட்டாலே பல பேரின் முகத்தில் தெரிவது ஒருவித சலிப்பு,கட்டுக்கடங்கா வெறுப்பு,இனம் புரியாத ஒரு கலக்கம்.இதற்கெல்லாம் காரணம் இந்த பஸ் சேவையின் முறையற்ற தன்மையே (சேவை என்று சொல்வதை கூட தவறு என்று கருதுகின்றேன்) கொழும்பு நகரில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் பஸ் 155.(நீண்ட நேரமும் தான்)மட்டக்குளியிலிருந்து ஆரம்பிக்கும் இதன் பிரயாணம் சொய்சாபுர என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.கொட்டாஞ்சேனை,மருதானை,பம்பலபிட்டி,வெள்ளவத்தை, கல்கிசை மற்றும் தெகிவளை போன்ற பல முக்கிய தரிப்பிடங்களை கடந்து செல்கின்றது.இந்த லிஸ்ட் தான் 155 கன்டக்டர்களின் தாரக மந்திரம்.

கண்ணா வருவாயா?மீரா கேட்கிறாள் என்ற பாடல் மிகவும் பொருத்தமானது,பஸ் தரிப்பிடத்தில் 155 இற்காக காத்திருக்கும் மக்களுக்குத்தான்(ஐயோ பாவம்!யார் பெற்ற மக்களோ).எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் காணக்கிடைக்காதது இந்த பஸ்ஸின் தரிசனம்(திருப்பதி தரிசனத்தை விட கடினம்).அதிக பயணிகளையும் கூடுதல் வருமானத்தையும் இலக்குகளாகக் கொண்டு இப் பஸ்ஸானது இயங்குவதால் பெரும்பாலான நேரங்களில் இதற்காக காத்திருப்பது சற்று கவலைக்கிடமான நிலைதான்(உனக்கெனவே காத்திருந்தாலே காலடியில் வேர்களும் முளைக்கும்)பல மணிநேரம் காத்து கிடந்த மக்களுக்கு 155 ஐப் பார்த்தவுடன் பாலைவனத்தில் நீர் கிடைத்தாற் போன்று இருக்கும்.(ஆடி அசைந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்ததாக நினைப்பு)

கூட்டமில்லாத 155 பஸ்ஸும் வாட்டமில்லாத155 பசன்ஜரும் கொழும்பில இருந்ததா சரித்திரமே இல்ல;(பன்ச் டயலொக் என்று கருதிக் கொள்ளவும்)50 பேர் செல்லக்கூடிய பஸ்ஸில் 150 பேரை ஏற்றிக் கொண்டு செல்வது 155 ற்கே உரித்தான இயல்பு.பஸ்ஸில் ஏறிய கணத்திலிருந்து இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.155 கொஞ்சம் வித்தியாசமான பஸ் ஏனென்றால் இதில் மக்கள் பயணிப்பதில்லை பதிலாக கொண்டு செல்லப்படுகின்றார்கள்.வியர்வை மழையில் குளித்து,சகித்துக்கொள்ளவே முடியாத  பாடல்களை கேட்டுக் கொண்டு,பிடிக்கக்கூட இடம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு (ஆனால் விழ வாய்ப்பில்லை),கஷ்டப்பட்டு சுவாசித்துக் கொண்டு (சில நறுமணங்களை)போகும் போது பஸ்ஸை சில சொகுசு வாகனங்கள் கடந்து செல்லும்.அப்போது தான் ஒவ்வோர் 155பயணியினுள்ளும் சொந்தமாக வாகனமொன்று வாங்க வேண்டுமென்ற வெறி தோன்றும்(பொறாமையால் எழுந்த பொங்கல்).

கிரிக்கெட்டில் டோனி கோலி ஜோடி போன்று 155இல் டிரைவர் கன்டக்டர் ஜோடி அற்புத அபார ஆட்டத்தை ஆடுகிறது.(திருட்டு ஜாம்பவான்கள்)டிரைவர் பற்றி சொல்வதென்றால் நம் நாட்டு அரசியல்வாதிகளை விட பயங்கரமான கேடி.அடுத்தடுத்த தரிப்பிடங்களில் பஸ்ஸை மணிக்கணக்காக நிறுத்தி பயணிகளை கடுப்பேற்றுவதில் வல்லவர்.வீதிகள் வெறுமனே இருந்தாலும் ஏதோ ஊர்வலம் போவது போல் பஸ்ஸை உருட்டிக்கொண்டிருப்பார்.சீ டீ பீ 155பஸ் ஒன்றை கண்டதும் தான் இவரது மொத்த டிரைவிங் திறமையும் வெளிப்படும்.அடுத்து நமது கன்டக்டர்.(ஜாடிக்கேற்ற மூடி)சில்லறைகள் மீது இவருக்கு இருக்கும் அதீத பிரியத்தினால் யாருக்கும் மீதிப்பணமே கொடுப்பதில்லை(பஸ்ஸில் ஒரு பிச்சைக்காரன்).படிக்கட்டு வரை கூட்டத்தை நிரப்பி பயணிகளை நொந்து நூடில்ஸ் ஆகும் நிலைக்கு தள்ளுபவர் இவரே.முன்னால் ஏறினால் “பஸ்ஸட யன்ன” (பின்னால் போ)பின்னால் ஏறினால் “இஸ்ஸராட யன்ன”(முன்னால் போ)என்பவையே இவர்களின் கட்டளைகள்.டிரைவர், கன்டக்டர் ஆகியோரின் அட்டகாசம் எல்லை மீறும் போது நிஜ வாழ்க்கையில் அந்நியன் என்ற கதாபாத்திரம் இருந்திருக்கலாம் என்று தோன்றும்(கும்பிபாகம்)

எல்லா கசப்பான அனுபவங்களையும் தாண்டி 155பல காதல் காவியங்கள் ஈடேறும் தளமாகவும் இருக்கிறது.சில தரிப்பிடங்களில் குட்டிச்சுவரேறி வெட்டிக் கதை பேசும் வாலிபர்களும் பஸ்ஸில் சீட் கிடைத்தும் உட்காராத உள்ளூர் அழகிகளும் இப்பஸ் பயணத்தில் காண்பது “பேரூந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்……..”

வேடிக்கையான பல விடயங்களை பகிர்ந்து கொண்டாலும் உண்மையில் முக்கிய வீதிப்போக்குவரத்தை வழங்கும் பஸ் சேவை ஒன்று இப்படியான கீழ்தர சேவையை வழங்குவது மிகுந்த கவலைக்குரிய விடயமே…

தேர்தல் காலங்களில் மட்டும் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் அரசியல்வாதிகள் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை அலட்சியப்படுத்துகின்றனர்.ஊழியத்திற்கு மேல் ஊதியம் வாங்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் இத்தகைய பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதுமில்லை.

155 என்ற பஸ் சேவையின் பெயரில் கொள்ளையடிக்கும் கயவர்களே!நீங்கள் சூறையாடும் பணம் அன்றாடம் வாழ்வில் துயரப்படும் ஏழை மக்களுடையது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.வருமான இலக்கு கொண்டு நீங்கள் செய்யும் பல காரியங்கள் பயணிகளை எந்தளவு தூரம் அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றது என்பது தொடர்பில் சிந்தியுங்கள்.

தெரிவிப்பது நாங்கள் ….தீர்மானிப்பது நீங்கள்……….

 

Image Courtesy:
http://www.wikiwand.com/en/Western_Province_(Sri_Lanka)_bus_routes

 
Tagged : /