லவ் மீட்டர்…

Share

கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு பேனை காகிதம் எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் காதலிப்பவர்களா? இல்லையேல்  சரியான வாழ்க்கை துணையை தேடுபவர்களா? உங்கள் காதலின் அளவை தெரிந்துகொள்ள ஒரு பரீட்சை நிச்சயமாக இந்த கட்டுரை உங்களை ஏமாற்றாது.

வணக்கம்.  காதலா? அப்படி என்றால் என்ன?  கேட்பவர்கள் யாரும் இருக்க முடியாது.  உலகத்தில் பல விஞ்ஞானிகள் இதுபற்றி ஆராய்ச்சி நடத்திய வண்ணமே இருக்கிறார்கள். ஆதாம் ஏவாள் என்று ஆரம்பிக்கும் இந்த காதல், பள்ளிக்காதல், பக்கத்துவீட்டுக்காதல் ,கல்லூரி காதல். கடிதத்தில் காதல், வாட்சப் முகநூல் காதல் என்றெல்லாம் நீண்டுகொண்டே போகிறது.

இந்தக் காதலை அலசினால் என்ன? ஒரு அறிவியலாளர் ஹார்மோன்கள் தான் காரணம் என்கிறார். ஒரு உளவியலாளர் மனம் தான் என்கிறார். இந்த சமூகம் இயற்கை தானே..என்கிறது. இதனைத் தாண்டி நீங்கள் ஒரு சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க ஐந்து படிகள் அவசியமாம். நான் சொல்லவில்லை ஹீலர் பாஸ்கர் சொல்கிறார். யாரப்பா ஹீலர் பாஸ்கர்? youtube சென்று பாருங்கள்.  சம்மணங்கால் போட்டுக்கொண்டு ஒரு மனிதன் சதா பேசிக் கொண்டிருப்பார். இது நல்லதில்லங்க.. இது ரொம்ப நல்லதுங்க…  என்றபடி ங்க..  ங்க… போட்டு பேசுவார்.
நீங்கள்  இனி ஒரு துணையை தேர்ந்தெடுக்க புள்ளி இடப்போகிறீர்கள்.  இருபதிற்கு எத்தனை என புள்ளி இடப்போகிறீர்கள். *(சீக்கிரம் பேனாவை எடுங்கள்  எனக்கு நேரமாகிறது)
நீங்கள் காதலிக்க நினைப்பவரை நினைத்து கொள்ளுங்கள்.

1- அழகு
2- குணம்
3- தாம்பத்தியம்
4- இலட்சியம்
5- சமுதாயம்

ஒவ்வொன்றிற்கும் 20 புள்ளிக்கு எத்தனை என இடுங்கள். அவரின் அழகு முதலில் உங்களை கவர வேண்டும். இது முக்கியம். அவர் கறுப்பா? சிவப்பா? என்பதல்ல. அவர் உங்களுக்கு அழகாக இருக்கிறாரா? இல்லையா? என்பதுதான் .அடுத்து குணம் -உங்கள் குணத்தோடு ஒத்துப்போகிற அளவை கணித்துக் கொள்ளுங்கள்.  உதாரணமாக நீங்கள் உலோபி, அவர் செலவாளி என்றால் கஷ்டம். நீங்கள் சாந்தசொரூபி, அவர் கோபக்காரர் என்றால்…. இப்படி எல்லா வகையிலும் உங்கள் குணத்தோடு ஒத்துப்போகிற வகை.

பின்னர் தாம்பத்தியம், இதை நம் வீட்டில்  உள்ளவர்கள்  ஜாதகம் பார்த்து சொல்வார்களே… அதுதான்.  மேலும் தீவிர காதல் என்றால் இது விதிவிலக்கு இருபதிற்கு இருபது போட்டுக்கொள்ளலாம். அடுத்தது  இலட்சியம் – இதுவும் பொருத்தமாக வர வேண்டும்.  ஒரே இலட்சியத்தை கொண்டிருந்தால் திருமணத்திற்கு பிறகு சிக்கல் குறைவு.  இந்த சமுதாயமும் முக்கியம், உங்கள் குடும்ப சூழ்நிலை அவரது குடும்பத்துடனான நட்பு போன்றவை.  இவர்களுக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள் இல்லாவிட்டால் சூனியம் வைப்பதற்கும் மருந்து போடுவதற்கும் தயாராகிவிடுவார்கள். இப்போது அளவை நீங்கள் குறித்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பரீட்சையில் நாற்பது புள்ளிக்கு அதிகம் பெற்றால் நல்லதாம். ஆனால் மனச்சாட்சியுடன் புள்ளியிட வேண்டும். பின்னர் உங்களுக்கு தான் கவலை. *(மேலதிக தகவல்களுக்கு காதல் முக்தி – ஹீலர் பாஸ்கர் youtube)

சரி… காதலிக்க தொடங்கி விட்டீர்கள் அல்லது தற்போது காதலித்து கொண்டிருக்கிறீர்கள்.
இதற்குப் பிறகு நீங்கள் காதலின் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிவதற்கான கேள்விகள்.

1-  நீ என்னைப் பிரிந்தால் செத்தே போய் விடுவேன்
2-சில சமயம் என்னால் எண்ணங்களை கட்டுப்படுத்த முடியவில்லை எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன்
3- உனக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம்
4- மற்றவரைவிட உன்னுடனே இருக்க விரும்புகிறேன்
5- நீ வேறு யாரையாவது பற்றி பேசினால் பொறாமையாக இருக்கிறது
6- உன்னை பற்றி எல்லாம் அறிய ஆவல்
7- நீ எனக்கு எப்போதும் வேண்டும்
8- உன் பிரியத்தை முடிவின்றி விரும்புகிறேன்
9- நீ தொட்டால் எனக்கு த்ரில்லாக  இருக்கிறது
10-  நீ தான் எல்லா விதத்திலும்  எனக்கேற்றவள்/வன் .
இதில் உண்மையில்லை  எனின் 1-3 புள்ளி, உண்மை  எனின் 4-6 புள்ளி, நிச்சயமாக  உண்மை எனின் 7-9 புள்ளி இடுக.
80- 90 காதல் பிசாசு
70- 79 காதல் பைத்தியம்
60- 69 காதலும் உண்டு
50 -59 காதலிக்கலாம்
40- 49 பரவாயில்லை
40க்கு கீழ்- ம்ஹீம்
நான் சொல்லவில்லை ஆனந்த விகடனிற்கு எழுதிய கட்டுரையில் சுஜாதா அவர்கள் சொல்கிறார்.
எல்லாம் இருக்கட்டும் இந்திரா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று என்னை பார்த்து நீங்கள் கேட்பது விளங்குகிறது
ஒரு இனத்தின் தேவை .காதல் தனது இனத்தின் நீடிப்பிற்கு தேவை.   பல பேர்  மோகத்தை கூட காதல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். காதலிற்கும் மோகத்திற்கும் என்ன வித்தியாசம்

மோகம் பார்த்த உடன் வருவது. ஒருவித ஆசை என்று சொல்லலாம். கொஞ்சம் புரியும்படி சொன்னால் எதிர்பாற் கவர்ச்சி. இது யாருடனும் வரும் . புதிதாக வீதியில் நடந்து சென்ற ஒரு பெண்/ஆண். பாடசாலை தோழி/தோழன் , நம் மீது நட்பு பாராட்டும் ஒருவர் இவர்கள் எல்லோரிலும் வரும். ஆனால் காதல் என்பது மோகத்தின் அடுத்த நிலை மோகத்தை தாண்டி ஒன்று மனதில் ஆழமாக பதிவது. மோகம் மறந்து விடும். வேறு ஒன்றை மறுபடி தேடும். அதுவே காதல் மறக்க முடியாத சங்கதி வெறுக்கின்ற போதிலும் நேசிக்க வைக்கும். காமம் அடுத்த கட்டம். பலருக்கு காதலிற்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது. ஆனால் மோகத்திற்கும் காதலிற்கும் தான் வேறுபாடு தெரிவதில்லை. பல மோகம் வரும் ஆனால் காதல் ஒன்றோ இரண்டோ தான் வரும். அதுவும் ஒரு காதல் மரித்தாலே இன்னுமொன்று வரும்.  காதலிக்கும் போது கூட மோகம் வரலாம். அந்த புதிய மோகம் காதலாக மாறினால் அது கள்ளக்காதல் இல்லையேல் பழைய காதல் போலிக்காதல். புரியாமல் தவிக்கின்ற நீங்கள் புள்ளி போட்டு பாருங்கள். ஆனால் மனதை விட பெரிய பரீட்சை இல்லை. அன்பையும் காதலையும் தாண்டி ஒரு உலகம் இல்லை.
புள்ளிகள் தான் முடிவல்ல.  புள்ளிகளும் சில உண்மைகளை கற்றுத் தரும்.  மோகத்திற்கும் காதலிற்குமான வித்தியாசத்தை விளக்கும். பிடித்தால் பகிரவும் கருத்துக்களை கூறவும்.

Image Courtesy : https://www.vecteezy.com/vector-art/325130-love-meter-valentine-s-day-card-design-element-vector

BY- Pakkiyarasa Mithurshan

 
Tagged : /