குருதியைப்பாலாக்கி….

Dheyogini 0 Comments

“உலகில் தேடி தேடி அலைந்தாலும்

மீண்டும் மீண்டும் அமரமுடியாத சிம்மாசனம், தாயின் கருவறை”

பத்து மாதங்கள் சுமந்து, உயிர்பிரியும் வேதனையை அனுபவித்தும், தன் சிசுவின் அழுகையை கேட்டு புன்னகைக்கும் ஒரே ஜீவன், தாய்.

பிறந்ததுடன் நிறுத்திவிடாமல் வாழ் நாள் முழுவதும் தன் குழந்தைக்காக வாழும் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்து விடுகிறாள். அதன் முதற்கட்டமே தாய்ப்பாலூட்டல்.

தன் குருதியை பாலாக்கி அதனை தன் தேகத்தில் இருந்து இன்னோர் தேகத்திற்கு அனுப்பி, அக்குழந்தையின் உடல், உள வளர்ச்சியை மிகைப்படுத்துகிறாள். தாய்ப்பாலூட்டல், குழந்தைக்கு தாயின் முலையில் இருந்து பால் கொடுக்கப்படும் முறையாகும்.

மனிதரில் குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடிய உணவுகளிலேயே மிகவும் உடல் நலம் பேணக்கூடிய உணவு தாய்ப்பாலாகும்.  சமூகத்தின் அடிப்படையில் இது ஓர் இயற்கையின் செயலாக இருந்தாலும், ஆண் சமூகத்தை கருதினால் பெரும்பாலானோர் வெளிப்படையாக பொதுசனத்தில் தாய்ப்பாலூட்டலை எதிர்ப்பவர்களே.  இருப்பினும் சிலர் இதற்கு ஆதரவளிப்பர்.

தாய்ப்பாலானது குழந்தையின் உடல் நலத்தை அதிகரிப்பதுடன், வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.  பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாயின் அடர்த்தியான முதல் பால்( சீம்பால்) குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இது இன்றியமையாததாகும்.  குழந்தையின் செரிமான அமைப்பினை பெற இருக்கும், பண்பட்ட பாலினை ஜீரணிக்க தயார்செய்ய சீம்பால் மிக முக்கியமானதாகும். சீம்பாலில் துத்த நாகம், கல்சியம் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்.  ஏழாம் மாதம் முதல் தாய்ப்பாலுடன் சரிவிகிதமாக ஊட்டச்சத்து நிறைந்த பல உணவுகளை வழங்க வேண்டும்.

தாய்ப்பாலின் ஊட்ட உணவானது தாயின் உடல் சேமிப்புகளில் இருந்து இரத்த ஓட்டம் மூலம் பெறப்படும். தாய்ப்பாலின் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் அனைத்துமே ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சம அளவில் கலந்திருப்பதுடன் உயிர்ச்சத்து, கனிமம், இம்மியப்பொருள் என்பவையும் காணப்படுகின்றது.  தாயின் உடலிலிருக்கும் பிறபொருளெதிரிகள் குழந்தைக்கும் தாய்ப்பால் மூலம் வழங்கப்படும்.

இதனால் பிறந்த குழந்தை தாயின் உடலில் இருந்து வெளியேறி, பாதுகாப்பற்ற வெளிச்சூழலை எதிர்கொள்ள இவை உதவும்.  தாய்ப்பாலானது, அமீபா நுண்ணுயிர் தாக்கத்திலுருந்து பாதுகாப்பளிக்ககூடிய பித்த உப்பு தூண்டும், கொழுப்புப்பிரி நொதி, லக்டோபரின், இமியுனோகுளோபுயூலின் ஏ என்னும் நோய் எதிர்ப்பு புரதம் வழங்குகிறது.

தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகள் தமது பிந்திய வாழ்வில் கூடிய அறிவாற்றலுடன் இருப்பர். தாய்ப்பால் ஊட்டப்படும் 39 – 42 மாதக் குழந்தைகளில் அதிகரித்த உடற்பருமன் ஏற்படுவதில்லை. இவை தவிர, ஒவ்வாமை வரும் சந்தர்ப்பம் குறைவடைதல், குடல் இழைய அழிவு குறைவடைதல், வேறு நீண்டகால உடல் நல குறைபாடுகள் குறைவடைதல் போன்றவை தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகளிடையே அதிகமாக காணப்படுகின்றது. இத்தகைய நன்மைகளை தரும் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு அளிப்பதில் சில தாய்மார்கள் தவறுகின்றனர். எனவே அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவருவது எமது கடமை.

Image courtesy:  www.google.lk