அம்மா

Blog Team , 0 Comments

அவளால் அவர்கள்.

இருண்ட தேசத்திலிருந்தே
ராஜாக்களும் ராணிகளும்
வந்திறங்குகிறார்கள்

கோரியோன் கோளத்தின்
அம்னியோன் சமுத்திரத்திரத்தில்
உதித்த முத்துக்கள்
உள்ளிருந்து விழுகின்றன

இருண்ட தேசத்திலிருந்து
இக் கிரகத்தில் விழுகையில்
வெளிச்சத்திற்கு பழக்கப்படாத அவர்கள் கண்களை மூடிக்கொள்ள
தாய் நிலத்தோடு தொப்புள் கொடியை
இழந்து போகிறார்கள்

ரத்தத்தில் தோய்ந்து
பூனைப்பாதங்கள் அசைத்தபடி
விழிக்காத விழிகளுடன்
பொத்திக் கொண்ட கைகளுடன்
அவர்கள் வந்துவிட்டார்கள்

முதல் வார்த்தை சொல்கிறார்கள்
அவளைப் பார்த்து

அதிலிருந்து அவள்
அவர்களுக்கு அனைத்துமாகிறாள்

நெருக்கம் நெற்றி முத்தம்
தாய்ப்பால் தாலாட்டு
தொட்டில் தூக்கம்
கனவு தேவதை
எல்லாமாகினாள்

நிலாச்சோறு நீலவானம்
சுமைதாங்கி பல்லக்கு
அறம் ஆத்திசூடி
அன்பு ஆசான்
எல்லாமாகினாள்

காணாத இறைவனை
கண்களில் கண்டோம்
அவள் எல்லாமாகி நின்ற
அவர்கள் பிரம்மா

அம்மா

இந்திரா.

By: –  Pakkiyarasa Mithurshan

Image courtesy : https://hips.hearstapps.com/hmg-prod.s3.amazonaws.com/images/mother-son-quotes-1557253200.jpg?crop=0.928xw:0.697xh;0.0700xw,0.0929xh&resize=480:*