புத்தாண்டு…

Share

இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.

புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும்.

இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும்.

சிங்கள மொழியில் (அழுத் = புதிய, அவுருது = ஆண்டு) “அழுத் அவுருது” என்றழைக்கப்படுகின்றது.

சிங்களவர் காலையில் எழுந்து நீராடி, புதிய வெள்ளை ஆடை அணிந்து, பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபடுவர். கிரிபத் (பால்சோறு) மற்றும் பிற பலகாரங்கள் செய்து, உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு களிப்பர். இத்துடன் பணியாரம், வாழைப்பழம் மற்றும் தின்பண்டங்களும் வைத்து படையல் இடுவர்கள். இப் படையலில் முக்கியமாக பால்சோறு இருக்கும்.

Written By: Kenuja Pathmanathan

Image Courtesy: https://bit.ly/3mK5wqn

 
Tagged : / /