வானவில்

Ashweni , , 0 Comments

வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் என்று  கூறுவது உண்டு.விதி என்பதற்கு அப்பாற்பட்டது வாழ்க்கை என்றே நம்பியிருந்தேன் அந்த ஒரு நாள் வரை. வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போன்றது என்று கூறுவார்கள்.

ஆனால் அந்த ஒரு மணித்தியால ரயில் பயணத்தில் எனக்கு வாழ்க்கையை உணர்த்தி விட்டவள் அவள்….

நெடுந்தூர பயணம், ஜன்னல் இருக்கை, போகும் வழி எங்கும் துணையாக கார்ல் மார்க்சின் கம்யூனிசம். மணி ஒரு 5 ஆகி இருக்கும், ரயில் சரியாக சிற்றூரில் நிறுத்தியது. கதிரவன் தன் கதிர்களை அடக்கி, அடங்கி போக, வானமே ஒரு இரத்த பூமி போல காட்சி அளித்தது. தான் மீண்டும் வருவேன் என்று அச்சுறுத்திய படியே கதிரவன் விலகி சென்றான்.

‘ஹூட்’ என்று விசில் அடிக்க ரயில் மீண்டும் அதன் இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்கியது.நான் மீண்டும் மார்க்சின் கம்யூனிசத்தில் மூழ்க ஆரம்பிக்க….

“Hi..” என்று ஒரு குரல் எதிரில் இருந்து.

தலையை சற்றே நிமிர்ந்து பார்த்தால், ஒரு பெண். என் தலையை சற்று அசைத்துவிட்டு மீண்டும் கம்யூனிசத்தை நாடினேன். எதிரில் இருந்தவள் தலையை கீழே சரித்து,

“க…ம்யு….னி..சம்.. ஒ… கம்யூனிசம் பட்டி வாசிக்கிறீங்களா..! Wow! இந்த காலத்துல புத்தகம் வாசிக்கிறவங்கள பாக்குறதே அரிது, அதுலயும் கம்யூனிசம் பட்டி….”

மீண்டும் அவள் மனம் நோகக் கூடாதே என்று சற்று சிரித்து விட்டு தொடர்ந்து படிக்க தொடங்கினேன்….

“Bore அடிக்காதா?”

“என்ன?”

“இல்லை இப்பிடியே தொடர்ந்து படிச்சிட்டு இருந்தா போர் அடிக்காதா? நான் எல்லாம் புத்தகத்த திறந்தாலே தூங்கிடுவேன்… ஹாஹா… அதுவும் கம்யூனிசம் பட்டி…”என்று நக்கலாக சிரித்தபடியே கூறினாள்.

“கம்யூனிசத்தில என்ன தப்பு இருக்கு… கம்யூனிசம் என்றது …”

“அய்யய்யோ கோவப்படாதீங்க… எனக்கு கம்யூனிசம் பட்டி ஒன்றுமே தெரியாது… தெரிஞ்சு கொள்ளவும் விருப்பம் இல்ல… “

மீண்டும் என் உலகத்தில் மூழ்கி விடலாம் என போக…
“Excuse me… நீங்க பெருசா பேசவே மாட்டீங்களா? எப்பிடி உங்களால அப்பிடி இருக்க முடியுது?”

கோபமாக புத்தகத்தை அடித்து மூடி விட்டு, “உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை?’

“Sorry கோவப்படாதீங்க…” என பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.

ஆண்களின் சாபக்கேடே பெண்களின் குழந்தை போன்ற அசைவுகள் தானே…

“இல்லை பரவால… கோவப்படேல… நீங்க சொல்லுங்கோ… “

“நானும் மூண்டு மணித்தியாலமா உங்களுக்கு எதிர்ல தான் இருந்திட்டு இருக்கேன்.நான் வந்ததுல இருந்து புத்தகத்தையே வாசிச்சிட்டு இருக்குறீங்க. எனக்கு யாரோடையும் பேசாம இருக்க முடியல…. போர் அடிக்குது..”

“போன் இருக்குதா? அத பயன்படுத்துங்கோ?”

“போன் இருக்கு… ஆனா சார்ஜ்… ஏங்க கொஞ்சம் நேரம் தான். அடுத்த இடத்துல நான் இறங்கிடுவேன். ஆனா இப்பிடியே பேசாம போனா தூங்கிடுவேன்… தூங்கினா kick ஆ இருக்காதுல.. “

“சரி… இப்ப என்ன பேசணும்…”

“அத பட்டி நீங்க கவலை படாதீங்க… ஓ… மறந்தே போயிட்டு… நான் மீரா…” என கூறி கையை அசைத்துக்கொள்ள நீட்டினாள்.

“நான் இளங்கோ…”

“இளங்கோவா???” என கூறி சிரித்தாள். அவள் சிரிப்பு சில்லறை சிதறுவது போல் இருந்தது. “இவ்வளவு பழைய பெயரா இருக்கு…. அய்யய்யோ திருப்பி கோவப்பட்டுராதையுங்க…”

“சே சே, அப்பிடி எல்லாம் இல்லை… நான் கூட சில நேரம் அப்பிடி யோசிச்சு இருக்கேன்…” என கூறி சிரித்தேன்.

“பாருடா… நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க…”என கூறி மீண்டும் சிரித்தாள்.மழலை தன்னை சுற்றி நடப்பவற்றை பற்றி கவலைப்படாமல், மனதில் வஞ்சகம் இல்லாமல் வாய் விட்டு சிரிக்கும் சிரிப்பு அது…

“உங்கட சிரிப்பு கூட நல்லா தான் இருக்கு…” என என்னை அறியாமலே கூறி விட்டேன்.

“அது தெரியும் எனக்கு… நான் சிரிக்கும் போது என் கண்ணு சின்னன் ஆகி மூக்கு சுருங்கும்… அது ரொம்ப அழகா இருக்கும்…”

“யாரு இதெல்லாம் உங்களுக்கு சொன்னது?”

“நானே தான்… நான் சிரிக்கும் பொது கண்ணாடில பார்த்து இருக்கேன்…”எனக் கூறிக்கொண்டே வாயருகே பறந்து வந்த கூந்தலை காதோரமாக்கி சரி படுத்தினாள்.

“அழகா இருக்குல்ல… சூரியன் மறையுறது..”
அதில் இருக்கும் அழகு அன்று எனக்கு புரியவில்லை. பேசினால் வில்லங்கம் ஆகி விடும் என்று சிரித்து கொண்டே தலை அசைத்தேன் அவள் கூறியதை கேட்டு.

“சொல்ல போனா இந்த உலகமே அழகுல… இந்த உலகத்துல ஒவ்வொரு சின்ன அசைவும் ஏதோ ஒன்ட எங்களுக்கு சொல்லுது…. சூரியன் மறையுறது கூட “கவலை படாதே! இருள் உன்னை சூழ் கொண்டாலும் நான் மீட்க வருவேன்” என்று  சொல்லிட்டே மறையுர மாதிரி இருக்குதுல…” உலகம் அழகா? இந்த உலகத்துல நடக்கிற பிரச்சினை பற்றி தெரிஞ்சுகொண்டு தான் பேசுறாளா? இவளப் போல வாழ்க்கைல எல்லாம் சுலபமா கிடைச்சவங்களுக்கு என்ன, உலகம் தங்க பாதை அமைச்சு கொடுத்து இருக்கும்… சரி ஏன் வீண் வம்பு என்று மீண்டும் தலையை அசைத்தபடி பல்லைக் கடித்துக் கொண்டு சிரித்தேன்.

“நீங்க ஏங்க ஒண்ணுமே பேசுறீங்க இல்ல? எப்பிடிங்க உங்களால இப்பிடி இருக்க முடியுது?”என அவள் கேட்கையில், தாமரை மலர்கள் ஆதவனை கண்டதும் விரிவது போல் அவள் விழிகள் விரிந்தன… அந்த கண்களினுள் எத்துனை ஆச்சர்யம்… இப்படி ஒரு மானுடன் இருப்பானா? இல்லை இவன் வேற்று கிரகத்தவனோ? என்று வினாவுவது போல் இருந்தன. அவள் விழிகள் பேசும் பாஷையை புரிய முற்படும்  முயற்சியில் அவள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறந்து விட்டேன்.

“இளங்கோ… இளங்கோ… Are you o-kay? ஏங்க என்ன ஒரு alien அ பாக்கிறது போல பாக்கிறீங்க?”

“Sorry… ஏதோ யோசனைல இருந்தன்…” எனக் கூறி சமாளித்தேன்.

“அதான் அதான் உங்க பிரச்சினை. நீங்க எல்லாத்தையும் உள்ளேயே வைச்சு யோசிக்கிறீங்க… அதான் பேச மாடென்டுறீங்க. நாம எல்லாம் அப்பிடி இல்ல பா… அப்பயே எல்லாத்தையும் பேசி கொட்டிடுவம். இல்லனா நமக்கு மண்டையே வெடிச்சிடும்,’ என்று கூறிய படியே ஜன்னல் வழி பார்த்தாள். திடீர் என “Wow” என்றாள்.

“என்ன? ஏன் Wow என்டீங்க… ?”

“இல்லை அங்க ஒரு பையன், ஒரு 9-10 வயசு இருக்கும், முறுக்கு வித்துட்டு இருந்தான்.
செம்மல… “

“செமையா? ஹூம் உங்களுக்கு எங்க புரிய போது இளமையில் வறுமையின் கொடுமை! மூன்டு வேலை சாப்பாடு கிடைக்கிறவனுக்கு தெரியாது ஒரு வேலை சாப்பாட்டுக்கு போராடுறவனோட வலி. இதான் இந்த சமூகம் இன்னும் முன்னேறாம இருக்கு. எத்தனை பேர் பசி பட்டினியால் வாடிட்டு இருக்காங்க… நீங்க அவன பார்த்து Wow என்றீங்க”எனக் கூறி நக்கலாக சிரித்தேன்.

அவளும் பொறுமையாக வாயருகே சிறு புன் முறுவலுடன், “ஆமாங்க எனக்கு வறுமையின் கொடுமை தெரியாது…. சாப்பாட்டுக்காக போராடுறவங்களோட வலியும் புரியாது. அந்த பையனோட வலியும் வேதனையும் நான் சந்திச்சது இல்லை தான், ஆனா பசி பட்டினில வாடி இந்த சமூகத்தின் மீது பழிய போடாம, அதே சமூகத்துல இருந்து ஒரு விடை கிடைக்கும் என்டு டைம் வேஸ்ட் பண்ணாம சுயமா நின்னு புழைக்கணும் என்டு நினைச்சு போராடிட்டு இருக்கிற அந்த இளம் ரெத்ததோட தன் நம்பிக்கைய நான் மதிக்கிறேன்… உங்களுடைய கண்களுக்கு அவன் வறுமை தெரிஞ்சு இருக்கு, என் கண்களுக்கு அவன் உழைப்பு தெரிஞ்சு இருக்கு.” பல அரசியல் பிரச்சாரங்கள் பற்றி விமர்சித்தவன், பல சமூக அநீதிகளுக்காக குரல் கொடுத்தவன், பல அவைகள், பட்டிமன்றங்கள், விவாதங்கள் என சந்தித்தவன்… இன்று ஒரு பெண் முன் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் வாயடைத்து நின்றேன்.

கடைசியாக ஒரு படியாக சமாளித்து “Wow” என்றேன்.
அதை கேட்டு அவள் வாய் விட்டு சிரித்தாள், கள்ள கபடமற்ற அதே குழந்தை தனமான சிரிப்பு. “எதிர்பார்க்களல….”

என்னை அறியாமலையே நான் அவளை பார்த்து புன் முறுவலுடன் வியந்து நின்றேன்… எவ்வளவு நேரம் ஆனது என தெரியவில்லை, “ஹூட்” என்ற சத்தம் கேட்க,”இளங்கோ… இளங்கோ…”என்று கூறிய படியே என் கவனத்தை ஈர்க்க அவள் என் கண் முன் கையை அசைத்தாள். “நான் இங்க தான் இறங்கணும். உங்கள சந்திச்சதுல மகிழ்ச்சி” எனக் கூறி கையை நீட்டினாள்.

நானும் மந்திரித்து விட்டவன் போல் அவள் கையை பிடித்து அசைத்தேன்.

“ஆல் தி பெஸ்ட் இளங்கோ!” என்று கூறி விட்டு அவள் சென்றாள்.

உடனே சுய நினைவை அடைந்து, “மீரா…”என்று அவளை கூப்பிட்டேன்.
கதவருகே நின்று என்னை திரும்பி பார்த்தாள், பார்த்து சிரித்தாள், அவள் கண்கள் சுருங்கி கூரிய வேலாயுதம் போல் பாய்ந்தன… மீண்டும் வாயடைத்து நின்றேன்.
அவளை பார்த்து சிரித்து என் கையை அசைத்தேன். என்னுடைய 25 வருட வாழ்க்கையில் முதல் முறையாக மனம் விட்டு சிரிப்பது போல் தோணிற்று. தாயைக்காணாது வழி தவறி அழும் சேய் தாயை கண்டவுடன் கொள்ளும் உவகைக்கு வார்த்தைகள் இல்லை. அதே போன்ற ஆனந்தத்தை அன்று நான் பெற்று கொண்டேன்.

எம் வாழ்வில் பலர் வந்து போவர். அதில் ஒரு சிலரை ஒரு முறை சந்தித்தால் போதும், வாழ்க்கை பூராக எம் நினைவுகளிலேயே பயணம் செய்வார்கள். அப்படி பட்டவள் தான் மீரா.

என் மனச் சிறையை உடைத்து, என் வாழ்வை ஒளிரச் செய்தவள், இந்த உலகை விரும்ப கற்று தந்தவள், இந்த உலகை ஒரு மாறுபட்ட கோணத்தில் உணர்த்தியவள், யுத்த கோலமாய் இருந்த என் வானில் வரையப்பட்ட அழகிய ஓவியம்… என் வானின் வானவில்…

Image Courtesy:

https://fthmb.tqn.com/hLGRDYMg_VrQAml0Py5iBij5ydw=/2000×1333/filters:fill(auto,1)/GettyImages-640946786-58e81b725f9b58ef7e7462f9.jpg
https://fineartamerica.com/featured/tranquil-sunset-and-rainbow-jay-harrison.html