தைப்பொங்கல் திருநாளும் நம் வாழ்வியலும்

Share

தைப்பொங்கல் என்றவுடன் சக்கரைப்புக்கை, வடை, பாயாசம், வெடிகள் என குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை கொண்டாட்டமாகவே இருக்கும். தமிழர்களால் கொண்டாடப்படும் இத்தைப்பொங்கலை பலரும் பல மாதிரிப் புனைகிறார்கள். தைப்பொங்கலை “தமிழர் திருநாள்” என்றும் “உழவர் திருநாள்” என்றும் “தமிழர்களின் வருடப்பிறப்பு” என்றும் பலமாதிரிப் புனைவுகளுடன் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படியானால் தைப்பொங்கல் என்றால் என்ன?. இதற்கு விடைகாண விளைகிறது இக்கட்டுரைப் பார்வையின் கோணங்கள்.

 

தைப்பொங்கல் தை மாதம் தமிழ் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் வரலாறு . தை 14 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா.

தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா,  என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

தைப்பொங்கலன்று நாம் பொங்கவைக்கும் முறையை பார்த்தோமானால் சூரியன் எழுவதற்கு முன்னர் எழுந்து குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து கோலம் போட்டு, பொங்கும் பகுதி மா மாக்குறுணல் செங்கட்டி தூள் கொண்டு வரையறுக்கப்படும். பின் முற்றத்தில் சூரியன் எழும் திசையை நோக்கிப் பொங்கல் பானை வைக்கப்படும்.

வரையறுக்கப்பட்ட பகுதியின் வடகிழக்கு முலையில், தலைவாழை இலையில் நெல்லிட்டு அதன் மேல் நிறைகுடம் கும்பம். வாழைப்பழம், வாழைப்பழத்தில் சாம்பிறாணிக்குச்சி, வெற்றிலையில் பாக்குச்சீவல், சாணத்தில் பிடிக்கப்பட்ட அறுகம்புல்லுப் பிள்ளையார், ஒரு குவளையில் பசும்பால், அறுகம்புல்லுடன் வைக்கப்படும். முக்கியமாக வசதி உள்ளவர்கள் வெண்பொங்கலுக்கு ஒரு பானையும் சக்கரைப் பொங்கலுக்கு ஒரு பானையும் வைத்தாலும் வெண் பொங்கலே விழாவின் முக்கியஸ்தர் ஆவார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். மேலும், “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார்கள் ஆன்றோர்கள். ஆனால் எங்களுக்கு திரைகடல் ஓடாமல் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக இந்த  தைப்பொங்கல் திகழ்ந்துகொண்டு இருக்கிறது, என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்

By S.T.Jegapragashan

Image Credits:

 
Tagged :