தித்திக்கும் தீப ஔி திருநாள்

Share

அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திராவிடர் கதை சொல்லி நிம்மதி கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல் இருப்போம்  வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளி வராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம் இதற்காகவே நாம் தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றோம். தீபாவளி உருவானது பற்றி பலவிதமான கருத்துக்கள் வெவ்வேறு மக்களிடம் நிலவுகிறது. அதனால் நாம் அந்த தலைப்பை பற்றி கதைக்காமல் இந்த குதூகலமான தீபாவளியின் பொதுவான அம்சங்களை பற்றி கலந்தாலோசிப்போம்.

‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும். தீபத்தில் பரமாத்மாவும் நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும், அதனால் தான் இப்பண்டிகைக்கு தீபாவளி என்று பெயர் வந்தது

மேலும் தீபாவளியன்று இந்துக்கள் பொதுவாக மேற்கொள்ளும் சமய கலாச்சார நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான இலங்கை  மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் அணிவர்.

தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும் எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும் சந்தனத்தில் பூமாதேவியும் புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.தீபாவளியன்று  எல்லா நதிகள் ஏரிகள் குளங்கள் கிணறுகளிலும் நீர்நிலைகளும் ‘கங்கா தேவி’ வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

மேலும் இவ்வருடமும் தீபாவளி எமக்கு அனைத்து சௌபாக்கியங்களும் தந்து இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை பகிர்கின்றேன்.

Image courtesies:

 
Tagged : /