சித்திரை புதுவருடப்பிறப்பு

Share

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்ததும் இந்நாடே”  “அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடித்ததும்  இந்நாடே” .அந்த வகையில் என் தந்தையும் தாயும் மூதாதையரும் வாழ்ந்துவரும் இந்தநாட்டில் நாங்கள் வாழ்க்கையின்   தாற்பரியத்தை உணர்த்தும் விதமாக பல விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடுகிறோம்.  ஆயிரம் நட்சத்திரங்கள் வானில் தோன்றி மறைந்தாலும் இரவுக்கு எப்படி நிலவு ஓர் அர்த்தத்தை தருகின்றதோ அதைப்போன்று ஆயிரம் விழாக்கள் அவனியில் இருந்தாலும் வாழ்க்கை என்ற விளக்குக்கு வெளிச்சம் போன்ற அர்த்தத்தை தருவது எமது சித்திரை வருடப் பிறப்பாகும்.

சித்திரை மாதம் வருகிறது என்றாலே அனைவரது மனதில் தோன்றுவது புத்தாண்டை வரவேற்கும் எண்ணம் .ஆம் அந்த அளவிற்கு  எதிர்பார்ப்பு மிக்க கொண்டாட்டமாக எமது சமூகத்தில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இலங்கை வாழ் தமிழ், சிங்களவர் சித்திரை புத்தாண்டை இன மத பேதமின்றி ஒற்றுமையாக கொண்டாடுவார்கள் அதனால் இப்பண்டிகை தேசிய பண்டிகை எனும் சிறப்பை பெறுகிறது பொதுவாக சூரியன் மேஷ இராசிக்கு நுழைவது சித்திரை மாத பிறப்பு எனப்படும். தமிழ் நாட்காட்டிக்கு ஏற்ப சித்திரை முதல்நாளை  நாம் வருடப்பிறப்பாக கொண்டாடி மகிழ்கிறோம்

புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக வரவேற்கப்படுகின்ற சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில் காலம் என்னும் ஒரு வசந்த காலம் தொடங்குகிறது .வசந்த காலங்களில் மாமரங்களில் மாந்தளிர்களும் மலர்களும் பூத்துக்குலுங்கும் அதேவேளையில் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்து குலுங்கும் மனித வாழ்க்கையில் இனிப்பும் கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இச்செயற்பாடு கருதப்படும் .தொடர்ந்து நாம் புதுவருட பிறப்பன்று கடைப்பிடிக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் பற்றி பார்ப்போம்.

சித்திரை முதல் நாளில் வீட்டை நன்றாக சுத்தம் செய்து நுழைவாயில் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாவிலை தோரணம் கட்டி மங்களம் சேர்க்கவேண்டும் .மேலும் வாசற்படி நிலைகளுக்கு சாணத்தால் மெழுகி அழகிய மாலை கோலமிட்டால்   லக்கிஷ்மி வாசம் செய்வாள் என்று ஒருநம்பிக்கை .மேலும் மஞ்சள் ,குங்குமம் ஆகியன  துஷ்ட தேவதைகளும் வீட்டிட்குள் நுழையாமல் தடுப்பதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மருத்து நீர் வைத்து குளித்தல் மற்றும் தெய்வ வேண்டல் போன்றவையும் வருடப்பிறப்பன்று முக்கியத்துவம் பெறும் விடயங்களாகும் .மருத்து நீர்; தாழம் பூ, தாமரை ,மாதுளை போன்ற இலைகளை வைத்து தயாரிக்கப்படும் .இந்நீரை வைத்து நீராடினால் புத்தாண்டில் நற்பலன்களை பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை .புத்தாண்டன்று தமிழர்கள் புத்தாடைகளை அணிந்து கோவிலுக்கு சென்று தெய்வவழிபாடுகளில் பங்குபற்றுவார்கள்.

புத்தாண்டில் அறுசுவை உணவுகளும் முக்கியமான ஒரு இடத்தை வகிக்கின்றது. சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமாக பிரகாசிப்பதனால் அன்று பானகம், நீர், மோர், பருப்பு வடை போன்றவற்றோடு வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி பாயசம் என்பனவற்றை செய்வார்கள். இவ்வுணவுகளை விருந்தினருடன் உண்டு மகிழ்வார்கள். இவ்வாறாக விருந்தினரின்  வருகையும் விருந்தோம்பலும் எமது பாரம்பரியமாக மாறியது.

சித்திரை வருடப்பிறப்பில் கைவிசேடம் என்பது மறுக்கமுடியாத விடயம் ஒன்று .பண்டைய காலங்களில் புத்தாண்டு நிமித்தம் கிணற்றில் மூலிகை பொட்டலம் ஒன்றை போட்டு சுபநேரத்தில் எடுப்பதை கைவிசேடமாக கருதினார்கள் .ஆனால் நாளடைவில் சுபநேரத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதுமாக   மாற்றமடைந்துவிட்டது. பெரியவர் அல்லது குடும்ப தலைவர் வெற்றிலையில் பணம் வைத்து அதன் மேல் நவதானியம் ,பாக்கு போன்றன வைத்து இளையவர்களுக்கு வழங்குவார்கள். மூத்தோர்களிடம் இருந்து கைவிசேடம் வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பணக்கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக நடைபெறும் என்பது ஒரு நம்பிக்கை.

இப்புண்ணிய காலம் முடிவடைந்த பின்னர் புத்தாண்டு கலாச்சார மற்றும் விநோத விளையாட்டுபோட்டிகள் நடைபெறும். இடத்திற்கு  இடம் பிரதேசத்துக்கு ஏற்ப வைபவ நடைமுறைகள் வேறுபட்டாலும் பாரம்பரிய நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் உடைத்தல் ,சேவல் சண்டை ,கிளித்தட்டு,சடுகுடு என்பன எல்லா இடங்களிலும் நடைபெறுவது சிறப்பு.மேலும் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல்,பல்லாங்குழி போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் விமர்சியாக நடைபெறும். இவ்வாறாக நாம் பல நிகழ்வுகளை புத்தாண்டன்று கண்டுகளிக்கலாம்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் ஆன்றோர்கள். ஆனால் எங்களுக்கு திரைகடல் ஓடாமல் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாக இந்த புத்தாண்டு திகழ்ந்துகொண்டு இருக்கிறது.இந்த சித்திரை புத்தாண்டிலே ஐக்கியம், நல்லெண்ணம் ,நல்லுறவு ,இறைவழிபாடு ,மதபுரிந்துணர்வு ,விருந்தோம்பல் என்பனவற்றை அறிந்து தித்திக்கும் இனிப்பை போல இவ்வாண்டு சித்திரை புத்தாண்டும் எல்லாருடைய  வாழ்க்கையிலும் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடையெதுவும்இல்லாமல் நடைபெறவேண்டி உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்கிறேன்.

-சா .தே .ஜெகப்பிரகாஷன்

Image Courtesy:

 
Tagged : / / /