மனிதி வெளியே வா…

Lavanya 0 Comments

மனிதி வெளியே வா

முகப்புத்தகம்,வாட்ஸ் அப்,வைபர்,இன்ஸ்டக்ராம் என சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் வீ பீ என் டவுன்லோட் செய்து அவற்றுள் பிரவேசித்து தமது அதீத ஈடுபாட்டை காட்டிக்கொண்டிருக்கும் இளம்சமுதாயத்தினரே!உங்கள் கவனத்தை திருக்குறள் வரிகள் ஈர்க்கப்போவதில்லை என்பதால்தான் ட்ரென்டில் இருக்கும் (இருப்பதாக கருதப்படும்)பாடல் வரியொன்றை தலைப்பிற்காக தேர்வு செய்தேன்.

மனிதி வெளியே வா!மன்னிக்கவும் மனிதனுக்கு பெண் பால் மனிதி என்று கருதிக்கொள்வோம்.(சொற்குற்றம்,பொருட்குற்றம் காண தயாராகும் வாசகர்களுக்கு மட்டும்)தலைப்பில் இருந்து தப்பிக்க எவ்வளவு போராட்டம்??

இப்பாடல் வரி என்னுள் எழுப்பிய கேள்வி “மனிதன் என்னும் சொல்லுக்குள் அடக்கப்படுகின்றாளா பெண்??” என்பது தான்.விடை தேட முற்படுகின்றேன் இந்த ஆக்கத்தை கருவியாயும் வாசகர்களான உங்களை கருத்தாவாகவும் கொண்டு..

மழலையாய் சிறுமியாய் யுவதியாய் சகோதரியாய் மணமகளாய் காதலியாய் மனைவியாய் தாயாய் பெருமிதம் கொள்ளும் பாத்திரங்கள் பலதை ஏற்று நடிக்கும் பெண்ணானவளை அவள் விருப்பமில்லாது வெட்கி தலை குனியச்செய்யும் பல பாத்திரங்களை ஏற்று நடிக்க வைக்கிறது இந்த சமுதாயம்.இது என் ஆதங்கம்!

பலரது எதிர்ப்புக்கு மத்தியில் சுதந்திரம் காண விரும்பினால் அவள் ஆட்டக்காரி.கொஞ்சம் படித்து விட்டால் அவள் அடங்காபிடாரி.நட்பில் ஆண், பெண் வேறுபாடு காட்டா விட்டால் அவள் நடத்தை கெட்டவள்.தனது கருத்தை கம்பீரமாய் சொன்னால் வாயாடி. காதலிக்க துணிந்தால் துரோகி.காதலித்தவனை கரம் பிடித்தால் ஓடுகாலி.திருமணம் தாமதித்தால் இராசி கெட்டவள்.குழந்தை இல்லை என்றால் மலடி.விவாகரத்திற்கு விண்ணப்பித்தால் வாழாவெட்டி.கணவனை இழந்தால் விதவை.இத்தனை பெயர் கொண்டு பெண்ணை மட்டும் வஞ்சனை முறையில் வர்ணிக்கும் இந்த சமூகம் ஆண்களின் குறைகளை சுட்டிக்காட்டும் பெயர் சூட்ட மறந்து போய் விட்டது.(யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)அதற்காக ஆண்களுக்கு இப்படியான பெயர் வைக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை மக்களே;

“பொம்பிள பிள்ளைய படிக்க வச்சு என்ன செய்ய போறிங்க??”என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக பெண்களின் கல்வி கனவை சூனியமாக்கும் ஆர்வம்(ஆர்வக்கோளாறு)மிக்கவர்கள் உள்ளவரை மனிதி அடக்கப்படுகின்றாள் என்று தான் அர்த்தம்.

காதல் திருமணத்தில் உள்ள சிக்கல்களை சிந்தித்து குடும்பம் காட்டும் ஆண்மகனை மணம் முடிக்க களத்தில் இறங்கினால் பல பரீட்சைகளை பாஸ் பண்ண தள்ளப்படுகிறாள் பெண்.எத்தனை முறை பெண் பார்க்கப்பட்டு ரிஜெக்ட் செய்யப்பட்டாலும் சலிக்காது சளைக்காது அலங்கரிக்கப்பட்ட பொம்மையாய் முகம் கொடுக்க வேண்டும். சகல கலைகளும் தெரிந்திருக்க வேண்டும்.(மாப்பிள்ளை மொக்கையாக இருந்தாலும் ௯ட )இவற்றில் எல்லாம் ஸக்ஸஸ் அடைந்து விட்டால் பெரிய ஆப்பாக வைப்பார்கள் சீதனம் வேண்டுமென்று……மாப்பிள்ளை வாழ்க்கையில் செட்டில் ஆக வரதட்சணை என்ற போர்வையில் ஒரு வியாபாரம்.இது ஒரு வித்தியாசமான விற்பனை ஏனென்றால் வாங்கும் நபரே (மாப்பிள்ளை)பணத்தையும் பொருளையும்(பெண்)பெற்றுக் கொள்கிறார்.வெளிப்படையாக சொல்வதென்றால் வாழ்க்கை துணைவியிடம் கேட்டு வாங்கும்  மரியாதையான பிச்சை(ஆனால் மரியாதையானது தானே…) என்று சொல்லலாம்.

உடலுறுதி கொண்ட ஆண்களை விட மன உறுதி கொண்ட பெண்கள் வலிமை மிக்கவர்கள் என்றாலும் பல பொது இடங்களில் மறைமுகமான பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படும் பெண்கள் உள்ளார்கள் என்பது உண்மை.கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு பேருந்தில் ஆசனம் வழங்க தயங்கி தூக்கம் வந்ததை போல் நடிக்கும் ஆண்களை தண்டிக்க முடியவில்லை.ஆனால் இவ்வாறு விமர்சிக்க முடியுமே(அடுத்த ஜென்மத்தில் பெண்ணாய் பிறக்க கடவது…)

இந்த கருத்துக்கள் எல்லாம் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் என்று பொங்கி எழுவதற்காக இல்லை மக்களே(காம் டவுன்…)சிந்திப்பதற்காக மட்டும் தான்.ஆணுக்கு நிகர் பெண் என்ற வாதமும் வேண்டாம்.பெண்ணுக்கு சவாலாய் ஆண்களும் வேண்டாம் என்பதே எனது கருத்து.

வருடம் ஒரு முறை மகளிர் தினத்திற்கு மட்டும் “பெண்கள் நாட்டின் கண்கள்”என்று வாட்ஸப் ஸ்டேடஸும் இன்ஸ்டா போஸ்டும் போடுவதை விடுத்து மனிதன் என்ற சொல்லிலிருந்து மட்டுமல்ல யதார்த்த வாழ்வின் சிக்கல்களிலிருந்தும் மனிதி வெளிவர விதி செய்வோம்…..

மனிதி வெளியே வா………

மனிதன் என்னும் சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே……..

 

Image courtesy: https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSaTrCU3Xnt_yNjFVhlihmqBHqYpCOMAAbX2aSEL65QdXGdVi8Q