தைப்பொங்கல் தினத்தின் சிறப்பு…

Share

தைப்பொங்கல் என்பது தமிழர் திருநாளாக,  தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. மக்களுக்கு விவசாயத்திலே உதவி புரிந்த சூரியனுக்கும் பசு போன்ற கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாகவே தைப்பொங்கல் ஆனது கொண்டாடப்படுகின்றது. தைமாதத்தை உத்தராயண காலத்தின் ஆரம்பம் என்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் வியர்வை சிந்தி உழைத்து சேமித்த நெல்லை அறுவடை செய்து அதன் பயனை அனுபவிக்கத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

பொங்கலன்று அதிகாலையில் எழுந்து நீராடி,  வீட்டு முற்றத்திலே சாணம் கரைத்த நீர் தெளித்து மாவினால் கோலமிட்டு அதன் நடுவிலே புதுப்பானை வைத்து அதில் பால் ஊற்றி வெண்நுரை தள்ளிப் பொங்க வைப்பர். பால் பொங்கி வரும் வேளையில் குடும்பத்தினர் அனைவரும் பட்டாசுகளை வெடிக்க வைத்து மகிழ்வார்கள். பின் அறுவடையின் மூலம் கிடைத்த புதிய அரிசி, வெல்லம், நெய், தேன் என்பன சேர்த்து இறுதியில் வாசனைக்காக ஏலக்காய் தூள் தூவி அடுப்பிலிருந்து இறக்குவார்கள்.


பொங்கலுடன் கரும்பு, பழ வகைகள், அறுவடையின் போது கிடைக்கப்பெற்ற மரக்கறிகள் என்பவற்றை வெவ்வேறு தலை வாழை இலைகளில் வைத்து சூரியனுக்குப் படைத்து தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வர். பின் அவற்றை உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ்வார்கள்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி கிராமங்களில்  பல விதமான போட்டிகளும்,  கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

இத்தைத்திருநாளின் சிறப்புக்களைப் பழந்தமிழ் இலக்கியங்கள் பல தெளிவு படுத்துகின்றன.

தை இத்திங்கள் தண்கயம் படியும்

என்று நற்றிணையும்

தை இத்திங்கள் தண்ணிய தரினும்

என்று குறுந்தொகையும்

தை இத்திங்கள் தண்கயம்  போல்

என்று புறநானூறுயும்

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ

என்று கலித்தொகையும்

இதற்கு சான்று பகர்கின்றன .

தைப்பொங்கலிற்கு மறுநாள் மாடுகளை சிறப்பித்து அவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடுவார்கள்.  இந்தப் பொங்கலிற்கு இனிப்பு எதுவும் சேர்க்காமல் பச்சரிசியில் மாத்திரம் பொங்கல் செய்வார்கள். பின் தாம் குடும்பத்தில் ஒருவராகவே கருதும் மாட்டிற்கு மாலை அணிவித்து பொங்கலை உண்பதற்காகக் கொடுப்பார்கள்.

இவ்வாறாக தைப்பொங்கல் ஆனது ஒவ்வொருவர் வீடுகளிலும் தமது வசதிக்கேற்ப சிறப்பாகக் கொண்டாடப்படும்.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

 

By Kenuja Pathmanathan

Image Credits: https://bit.ly/3skelJU

 
Tagged : /