தைமகளை வரவேற்போம்

Share

கார் இருள் சூழ்ந்த வயல்வெளியில்,
செக்கச்சிவந்து மிளிரும் தணலின் எழுச்சியில்,
வட்டவடிவ மட்பானையை
கம்பீர தழல் வீரித்து அணைத்தது…

நிறைபானையாய் கழுத்து வரை
அதிகாலை ஆவின் மடியில் கறந்தெடுத்த
தூய்மையின் நிறமான பால்;

சேவலின் கொக்கரக்கோ ஓசை
பரவலாய் வயலின் திசைகளில் ஒலிக்கும் முன்பே,
விறுவிறுவென வேலைகள் செய்யும்
உழவர் குடும்பத்தினர்;

பானையின் அருகிலோ
அத்தணலின் பிரகாசத்தின் நிமித்தம்
தகதகவென தங்கம் போல் மின்னும் பயிரிலருந்து                    சுத்தமாக்கிய முதல் அறுவடைப்பயிரின் அரிசி.

நாவில் தித்திக்கும் சக்கரை,
உடல் சித்திக்க பயறு,
மெருகூட்டும் முந்திரி திராட்சை,
வாசத்திற்கு ஏலம்,
ருசிக்கு நெய்,
இவை ஒரு புறம் இருக்க;

ஆவின் பால் மெல்ல மேலே பொங்க,
ஆங்காங்கே ஓடிய குடும்பத்தினர்
ஒன்று கூடினர் பானையின் அருகே
கிழக்கு வானில் உதயன் உதயமாகுவானா என்று பார்க்க
காலைக்கதிரவன் வந்தான்.

பயம் கண்ட இருள்
களம் காண மறுத்து ஓடினான்
மனதின் இருளும் நீங்கச்சென்றது

இரு கரங்கள் கூப்பி
கதிரவனை வணங்கி
பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி வணங்கினர்.

Image Courtesy: https://bit.ly/3vwWANz

 
Tagged : /